இந்திய சமூகத்தில் காலம் காலமாக தொடர்ந்து அமலில் இருந்து வரும் பல்வேறு வழக்காறுகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும் என்று சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது நடைமுறைக்கு ஏற்ப அவைகளில் சில மாறியும் வருகின்றன. வழக்கறிஞர்கள் சீருடையில் மாற்றம் வேண்டும் என்பது, அவ்வாறு நீடித்து வரும் கோரிக்கைகளில் ஒன்று.

ஆண்டாண்டு காலமாக மாறாமல் நீடித்து வந்த பல்வேறு பழக்க வழக்கங்களை கொரோனா மாறுதலுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, கொரோனா காலம் முடியும் வரையிலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கோட், கவுன் அணிய தேவையில்லை எனும் விதமாக, நேற்று (13.05.20) உச்சநீதிமன்றம் ஒரு சுற்றறிக்கை விடுத்துள்ளது. உச்சநீதிமன்ற அறிவிப்பு என்பதால், இதனை நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய வழக்கறிஞர்கள் குழுமமானது,  இந்தியாவில் எந்த ஒரு நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் முன்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள், அங்கு நிலவும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உடைகள் அல்லது கோட் அணிந்து கொள்ளுதல் தொடர்பாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என வழக்கறிஞர்கள் சட்டம், 1961ன்  பிரிவு 49  (1) (gg) கூறுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்திய வழக்கறிஞர்கள் குழும விதிகள், 1975 உருவாக்கப்பட்டது. அதன் பகுதி IVல், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், விசாரணை நீதிமனறங்கள், தீர்ப்பாயங்கள் அல்லது விசாரணை அதிகாரிகளின் முன்பாக ஆஜராகும் போது, ஆண் வழக்கறிஞர்களுக்கு வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை, கருப்புக் கோடு அல்லது சாம்பல் நிற பேன்ட் அல்லது வேஷ்டி, கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கோட் மற்றும் வழக்கறிஞர் கவுனும், பெண் வழக்கறிஞர்களுக்கு கருப்பு அல்லது வெள்ளை சட்டை, புடவை, சுரிதார், கழுத்தில் வெள்ளை பட்டை, கருப்பு கோட், வழக்கறிஞர் கவுன் ஆகியவைகளை கண்ணியமான ஆடம்பரமற்ற முறையில் உடுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் உடைகள் தொடர்பாக விதிகள் இயற்றப்பட்டது.

இதில் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றங்கள் தவிர்த்த இதர நீதிமன்றங்களில் ஆஜராகும் போது வழக்கறிஞர் கவுன் அணிய வேண்டியது கட்டாயமல்ல என்ற விதிவிலக்கு உள்ளது. ஆனாலும் விசாரணை நீதிமன்றங்களில் எந்த வழக்கறிஞரும் கவுன் அணியாமல் ஆஜராவதில்லை. மாறாக, இதர நீதிமன்றகளுக்கு அந்த விதி இருப்பதன் காரணமாக, தீர்ப்பாயங்கள், மக்கள் நீதிமன்றங்கள், ஏன் வருவாய் நீதிமன்றங்களிலும் கூட கோட் கவுன் அணிந்து ஆஜராகும் வழக்கறிஞர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

வழக்கறிஞர்கள் சட்டத்தில் நீதிமன்றங்கள் இருக்கும் பகுதியின் காலநிலைக்கு ஏற்ப உடைகள் இருக்கும் வகையில் விதிகளை உருவாக்கி கொள்ளலாம் என இருந்தாலும், அது தொடர்பான விதிகளிலும், நடைமுறையிலும் அவ்வாறு இல்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரையிலான பகுதிகளில் இருக்கும் எல்லா நீதிமன்றங்களிலும் எல்லா காலங்களிலும், கோட், கவுன் உள்ளிட்ட சீருடையை அணிந்துதான் வழக்கறிஞர்கள் ஆஜராகிவருகிறார்கள்.

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. இன்றைய நிலையில் மேற்கு வங்காளத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. கேரளாவில் அன்றாடம் மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 40 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கோர தாண்டவம் ஆடுகிறது. டெல்லியில் குளிர் அடிக்கிறது. ஆனால் சீருடை மட்டும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி நடைமுறையில் உள்ளது.

வழக்கறிஞர் கவுன் மற்றும் கோட் அணிவதை பொதுவாக பல வழக்கறிஞர்கள் விரும்புபவர்களாகவே இருப்பார்கள். கோட் அணிந்து பணிபுரிவதை ஒரு சமூக அந்தஸ்தாக பலர் கருதுகிறார்கள். ஆனால் அந்த உடை நாம் வாழும் சூழலில் அணிந்துகொள்வதற்கு தோதாக இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் உண்மை.

மருத்துவர்களின் சீருடையான வெள்ளை நிறக் கோட்டை மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவிர்த்து பல மருத்துவர்கள் தற்போது அணிவதில்லை. அந்த கோட் அணியாததால், அவர்கள் மீதான பார்வையிலும் மதிப்பிலும் நமக்கு மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. அவர்களிடம் நம்பிக்கையோடு சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

நமது நாட்டில் பெரும் பகுதி மாநிலங்கள் அதிக வெப்பம் நிலவும் பகுதிகளாகும். அந்த பகுதிகளில் இருக்கும் நீதிமன்றங்களில் கவுன் அணிவது வழக்கறிஞர்களுக்கு மிகவும் அயர்ச்சியைத் தரும். குறிப்பாக வெயில் மாதங்களான மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான மாதங்களில் கவுன் அணிந்து ஆஜராவது சிரமமானதே. அது மட்டுமில்லாமல் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் வியர்வையில் உடைகள் நனைந்து உடம்போடு  ஒட்டி விடும். மேலும், பாரமான அந்த கோட் கவுனை நாள் முழுவதும் அணிந்து, அதனை சுமந்து கொண்டே இருப்பது மேலும் சோர்வடையச் செய்யும். எப்போது கோட் கவுனை கழற்றலாம் என்ற மனநிலையில் தான் கோட் கவுன் வேண்டும் என நினைக்கும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் இருப்பார்கள்.

உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் நீதிமன்ற அறைகள் அனைத்தும் குளிரூட்டப்பட்டிருக்கும். அங்கு தொழில் செய்து வரும் பல வழக்கறிஞர்களே கவுன் வேண்டாம் என நினைக்கும் போது, மின் விசிறிகள் கூட சரியாக இயங்காத மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் இருக்கும் விசாரணை நீதிமன்றங்களில் தொழில் புரிந்து வரும் வழக்கறிஞர்களின் நிலை குறித்து சொல்லவே வேண்டாம். அதன் காரணமாகவே, விசாரணை நீதிமன்றங்களில் பணியாற்றும் பெரும்பாலான  வழக்கறிஞர்கள், தாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் நேரம் தவிர இதர அனைத்து நேரங்களிலும் கவுனை கழற்றி கைகளில் வைத்துக் கொள்கிறார்கள்.

கோடை காலத்தின் அதீதமான வெயிலை மனதில் கொண்டு, வழக்கறிஞர்கள் கோட் கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, 2015 கோடை காலம் முதல், விசாரணை நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் கோட், கவுன் அணிய வேண்டாம் என 2014ம் ஆண்டு ஜுலை மாதம், இந்திய வழக்கறிஞர்கள் குழுமம் கூறியது. ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.

கோட் கவுன் அணிந்து வரவில்லை என்பதற்காக தீபக் என்ற வழக்கறிஞருக்கு, 2019 ஏப்ரல் மாதத்தில் கேரளா மாநில விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி மறுக்கப்பட்டது. அதனையடுத்து அவர் தொடர்ந்த வழக்கில், விசாரணை நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் கோடை காலத்தில் கோட், கவுன் அணிய வேண்டாம் என 12.04.19  அன்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொழில்சார்ந்த சீருடை அணியும் விதம் என்பது அணிபவருக்கு ஒருவித நம்பிக்கை அளிப்பது, நன்னடத்தையின் வெளிப்பாடு, தொழிலின் அடையாளம், தனது தொழிலின் தனித்துவம் என்பது போல பல கோணங்களில் பார்க்கப்படுகிறது. ஆனால் கவுனும் கோட்டும் அணியாமல் தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கு நடத்தி வருவது எந்த விதத்திலும் அவர்கள் மீதான பார்வையில் மாற்றத்தையோ, நீதித்துறையின் மாண்பிற்கு இழுக்கையோ ஏற்படுத்திவிடவில்லை. உடையில் நேர்த்தி என்பதற்கும் சீருடையாக கோட், கவுன் அணிவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில், இங்கிலாந்தில் அந்த நாட்டு தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப நடைமுறையில் இருந்த வழக்கறிஞர்களின் உடையை அப்படியே இந்தியாவில் நடைமுறைப் படுத்தினார்கள். அதில் அப்போது நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தலையில் அணிந்திருந்த விக்கை மட்டும், தற்போது எவரும் இங்கே அணிவதில்லை. மீதமெல்லாம் அப்படியே இன்றளவும் தொடர்கிறது. தலைப்பாகை காணாமல் போனதின் காரணமாக இங்கே நீதிபரிபாலனத்தில் எவ்விதமான தடங்கலும் ஏற்பட்டு விடவில்லை.

அதுபோல வேஷ்டி அணிந்து கொள்ளலாம் என்று தற்போதையை சட்டத்தில் அனுமதி அளிக்கப்படிருந்தாலும், அந்தப் பழக்கமானது காலாவதி ஆகிவிடும் நிலையில் இருப்பதால் அதனை அணிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு எவரும் வருவதில்லை. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் 11.07.2014  நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், வேஷ்டி கட்டி சென்றதற்காக, நீதியரசர் ஹரி பரந்தாமன், வழக்கறிஞர்கள் காந்தி, ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வேஷ்டி அணிந்து நீதிமன்றங்களுக்கு  வந்தார்கள் வழக்கறிஞர்கள்.

கடந்த சில ஆண்டுகளாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் சில குறிப்பிட்ட வழக்குகள் மட்டும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. மொத்த நீதிமன்றமும் அப்படி இயங்கியது இல்லை. ஆனால், கடந்த 40 நாட்களாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும், விசாரணை நீதிமன்றங்களும் இணையம் வழியாகவே வழக்குகளை ஏற்று, இணையம் வாயிலாகவே அவைகளை நீதிமன்றத்தில் இருக்கும் தங்களது அறைகளில் இருந்தபடியே  விசாரித்து தீர்ப்பிட்டும் வருகிறது. இவ்வளவு கால விசாரணை நடைமுறைகளில் இருந்து விலகி, தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் புதிய நடைமுறைகளுக்கு நீதிமன்றமும் தன்னை ஆட்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டது.

இப்படியாக, பணி சூழல் மேம்படவும், வேலை செய்வதற்கு இலகுவான வழிகளை உருவாக்குதல்/பின்பற்றுதல் போன்றவைகளை மையப்படுத்தி, நடைமுறைகளில் மாற்றங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதுபோல, காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களை நீதித்துறையும் ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறது.

நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை விளைவிப்பதுடன், காலனி ஆட்சியின் நீட்சியாக இன்றளவும் தொடர்ந்து வரும், வழக்கறிஞர்களின் சீருடையான கோட்டுக்கும், கவுனுக்கும் நிரந்தரமாக விடை கொடுப்பதற்கு இதுதான் மிகச்சிறந்த தருணம். அதனை நிலைப்படுத்தும் விதமாக, இந்திய வழக்கறிஞர்கள் குழுமம் அதற்குரிய விதிகளில் தேவையான திருத்தங்களை உடனடியாக கொண்டு வரவேண்டும்.